ஈரோட்டில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைமையிட செயலாளர் ஆர்.வசந்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் க.சு.பிரகாசம், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. எனவே பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் ரவிக்குமார் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.