விழுப்புரம் உட்கோட்டத்தில், கொலை வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் கைது

விழுப்புரம் உட்கோட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இனி எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2020-02-06 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் பிரகா‌‌ஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன்(வயது55), என்பவர் கடந்த 4-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் முன்னிலையில், இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கூறுகையில், கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் தடுப்புக்காவலில் கைது செய்து வருகிறோம். இந்த 26 பேரில் 8 பேர் ஒரு கொலை வழக்கிலும், 3 பேர் இரண்டு கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள். இவர்களில் பலர் திருந்தி சொந்த தொழில் செய்து வருகிறார்கள் என்றார்.

மேலும் செய்திகள்