மராட்டியத்தில் குட்கா கடத்தல்காரர்கள் மீது மோக்கா சட்டம் பாயும் மந்திரி அனில் தேஷ்முக் எச்சரிக்கை
குட்கா பொருட்கள் கடத்தல்காரர்கள் மீது மோக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் குட்கா(போதைப்பாக்கு, புகையிலை) பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் குட்கா பொருட்கள் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதுகுறித்து முடிவு எடுக்க நிதி மந்திரி அஜித்பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு துறை மந்திரி ராஜேந்திர சிங்னே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மோக்கா சட்டம் பாயும்
அப்போது மாநிலத்தில் குட்கா பதுக்கல், கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது மராட்டிய திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டத்தின் ( மோக்கா) கீழ் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலை உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதேபோல குட்கா கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மந்திரி அனில் தேஷ்முக் எச்சரித்துள்ளார்.