ஹாவனூரு கிராமத்தில் சம்பவம் துங்கபத்ரா ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி கிராம தேவதை திருவிழாவில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்

ஹாவனூரு கிராமத்தில், துங்கபத்ரா ஆற்றில் மூழ்கி வாலிபர் ஒருவர் பலியானார். கிராம தேவதை திருவிழாவில் கலந்து கொண்ட அந்த வாலிபருக்கு இந்த சோக சம்பவம் நேர்ந்துள்ளது.

Update: 2020-02-06 23:24 GMT
பெங்களூரு,

கதக் மாவட்டம் சிராஹட்டி தாலுகா சூரனாகி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் காசிகோவி(வயது 19). இவர் நேற்று முன்தினம் ஹாவேரி மாவட்டம் ஹாவனூரு கிராமத்தில் நடந்த கிராம தேவதை திருவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் கிராம தேவதை பல்லக்கு ஊர்வலத்திலும் பங்கேற்றார். பல்லக்கு ஊர்வலம் முடிவில் கிராமத்தையொட்டி ஓடும் துங்கபத்ரா ஆற்றங்கரைக்கு சென்று முடிவடைவது வழக்கம்.

பல்லக்கு ஊர்வலம் முடிந்ததும் பக்தர்கள் அனைவரும் ஆற்றில் புனித நீராடுவார்கள். அதேபோல் நேற்று முன்தினமும் பல்லக்கு ஊர்வலம் முடிந்ததும் பக்தர்கள் அனைவரும் துங்கபத்ரா ஆற்றில் புனித நீராடினர். அவர்களுடன் சேர்ந்து மஞ்சுநாத்தும் புனித நீராடினார்.

ஆற்றில் மூழ்கி பலி

அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் ஆற்றில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் குறித்து குத்தலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு படையினருடன் வந்து ஆற்றில் மஞ்சுநாத்தின் உடலை தேடினர்.

நேற்று முன்தினம் மாலை வரையில் மஞ்சுநாத்தின் உடல் கிடைக்கவில்லை. இதனால் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் தீயணைப்பு படையினர், அப்பகுதியில் வசித்து வரும் நீச்சல் வீரர்களுடன் சேர்ந்து பரிசல்கள் மூலம் ஆற்றில் மஞ்சுநாத்தின் உடலை தேடினர்.

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் நேற்று மதியம் அவருடைய உடலை ஆற்றில் இருந்து தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்