திருச்செந்தூர் கோவிலில் சுவாமி - அம்பாள் தேர்களுக்கு ரூ.23 லட்சத்தில் புதிய சக்கரங்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி-அம்பாள் தேர்களுக்கு ரூ.23½ லட்சத்தில் புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

Update: 2020-02-06 21:59 GMT
திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் மாசி திருவிழாவும் ஒன்று ஆகும். இந்த மாசி திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் 10-ம் நாள் தேரோட்டத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி-அம்பாள் தேர்களை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்வார்கள்.

இதனை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் தேர்களை புதுப்பிப்பதற்காக, கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து திருச்சி பெல் நிறுவனத்தில், சுவாமி தேரில் பொருத்துவதற்காக ரூ.14½ லட்சம் செலவில் 2 அச்சுகள், 6 சக்கரங்களும், அம்பாள் தேரில் பொருத்துவதற்காக ரூ.9 லட்சம் செலவில் 2 அச்சுகள், 6 சக்கரங்களும் தயாரிக்கப்பட்டன.

இதையடுத்து புதிய 12 சக்கரங்கள், 4 அச்சுகளை கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அவற்றை சுவாமி-அம்பாள் தேர்களில் பொருத்தும் பணி கடந்த 2 நாட்கள் நடந்தது. தேர்களில் இருந்த பழைய அச்சுகள், சக்கரங்களை கழற்றி விட்டு, அவற்றுக்கு பதிலாக புதிய அச்சுகள், சக்கரங்களை பொருத்தினர். இந்த பணியை திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்