“தைப்பூசம்-மகா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும்” அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

“தைப்பூசம்-மகா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும்“ என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தினார்.

Update: 2020-02-06 21:55 GMT
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் விஜயின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த ‘பிகில்‘ படம் ரூ.400 கோடி வரை வசூல் செய்து உள்ளது. இதற்கு அவர்கள் வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி உள்ளனர். எனவே, நடிகர் விஜயின் சொத்துகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

அதேபோல் பல நிறுவனத்தினர் சினிமா படங்கள் எடுக்கும்போது இந்து சமய விரோத கருத்துகளை திணித்தும், நாட்டுக்கு விரோதமான கருத்துகள் கொண்ட படங்களையும் எடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் வருவார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் இந்த மாதம் மகா சிவராத்திரி விழா நடக்க உள்ளது. இந்துக்களின் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று. எனவே, தமிழக அரசு மகா சிவராத்தி, தைப்பூசம் ஆகிய விழாக்களுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அலை வீசுகிறது. பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் 4 பல்கலைக்கழகங்களில் மட்டும் செயற்கையான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது. தி.மு.க. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டு இருக்கிறது. அவர்கள் தற்போது தங்களின் தொண்டர்கள், 2-ம் கட்ட தலைவர்களை நம்புவதில்லை. தி.மு.க. இன்று ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்