செல்போனுக்காக குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் அமைச்சர் கந்தசாமி வேதனை

செல்போனுக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று அமைச்சர் கந்தசாமி வேதனை தெரிவித்தார்.

Update: 2020-02-06 22:30 GMT
பாகூர்,

இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம், புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் கிருமாம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணை பதிவாளர் இரிசப்பன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுச்சேரியில் 512 கூட்டுறவு மையங்கள் பதிவு பெற்றதில் பாண்லே மட்டும் லாபம் தரக்கூடிய நிறுவனமாக உள்ளது. தற்போது அந்த நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பால் உற்பத்தியை பெருக்க மானியத்தில் மாடு வளர்க்க கடன் வழங்கப்பட்டது. அதனை பெற்றவர்கள், கடனையும் செலுத்தவில்லை, பாலையும் உற்பத்தி செய்யவில்லை. வேலைவாய்ப்பு இல்லாததால் புதுச்சேரியில் கொலை, கொள்ளைகள் அதிகமாக நடக்கிறது. 20 வயதுடைய இளைஞர்கள் செல்போனுக்கும், மோட்டார் சைக்கிளுக்கும், மதுகுடிக்கவும் ஆசைப்பட்டு குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

எனது ஆதரவாளர் சாம்பசிவம் கொலை செய்யப்படுவார் என்று வில்லியனூர் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனுக்கு முன்பே தெரிந்தும், அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் சட்டம் தன் கடமையை செய்யவில்லை.

திட்டங்களை நிறைவேற்ற போதிய நிதி கொடுக்காமல் மத்திய அரசு, புதுவை மாநில அரசை வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் தாகூர் கலைக்கல்லூரி பேராசிரியர் வேலுராஜ், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் பாஸ்கர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மேலும் செய்திகள்