திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

Update: 2020-02-06 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் என்று நம்பப்படுகிறது.

விழிப்புணர்வு

இந்த நோய் அறிகுறிகள் கண்ட நபர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாகவும், நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் எந்த நபரும் பாதிப்பிற்கு உள்ளாக வில்லை. இந்த கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் போன்றவற்றில் தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நோயை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆஸ்பத்திரிகளிலும், மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அச்சம் கொள்ள தேவையில்லை

இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட பொதுமக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கைகழுவ குறைந்தபட்சம் 30 வினாடிகள் எடுத்து கொள்ள வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிகொள்ள வேண்டும். 3 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு உண்பவர்கள் நன்கு வேக வைத்த பின்னர் சாப்பிட வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த வித, அச்சமும் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர்.இளங்கோவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்