இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழாவையொட்டி இருசக்கர வாகன பேரணி
இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
நாகர்கோவில்,
இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட செஞ்சிலுவை சங்க கிளை அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு குமரி மாவட்ட கிளை சேர்மன் பேராசிரியர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் தலைமை தாங்கினார். விழாவில் நூற்றாண்டு நினைவுத்தூண் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் செஞ்சிலுவை சங்க கொள்கை விளக்க இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனை நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். பேரணி வடசேரி, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி காந்திமண்டபத்தை சென்றடைந்தது.
பேரணி செல்லும் வழியில் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ– மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சிகளில் செஞ்சிலுவை சங்க துணை சேர்மன் குமாரதாஸ், பொருளாளர் ஜெயகர், செயலாளர் சிம்சன், துணை செயலாளர் ஹமீது, செயற்குழு உறுப்பினர்கள் அருள்கண்ணன், சிவகுமார், ரமேஷ்குமார், டால்பின்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பள்ளி– கல்லூரி மாணவர்கள் வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரம் நடுதல் நிகழ்ச்சி, இலவச மருத்துவ முகாம், இலவச சட்ட உதவி முகாம், போதை விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது.