பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு தனியார் நிறுவன ஊழியர்கள் தர்ணா - கட்டண பாக்கியை வழங்க கோரிக்கை
சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ததற்கான கட்டண பாக்கியை வழங்கக்கோரி ஆண்டிப்பாளையத்தில் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு தனியார் நிறுவன ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் அணைப்பாளையம் தரைப்பாலம் அருகே ஆண்டிப்பாளையம் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் 9 சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சாயப்பட்டறைகளில் இருந்து நாளொன்றுக்கு 13 ஆயிரம் லிட்டர் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் பணியை இகோ பியூர் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. அதாவது ஆயிரம் லிட்டர் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ரூ.250 கட்டணம் நிர்ணயம் செய்து இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த தனியார் நிறுவனத்தின் கீழ் 35 ஊழியர்கள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஆண்டிப்பாளையம் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சுத்திகரிப்பு பணியை செய்ய வேண்டாம் என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும், சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் மற்றும் அந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றிய 35 ஊழியர்கள் நேற்று காலை ஆண்டிப்பாளையம் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நுழைவு வாசலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் சுரேஷ் கூறும்போது, ‘அரசு அங்கீகாரம் பெற்று ஒப்பந்தம் செய்து இந்த பணியை மேற்கொண்டு வந்தோம். எங்களுக்கு 4 மாதமாக சுத்திகரிப்புக்கான கட்டண பாக்கியை சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் தர வேண்டியிருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 35 ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று எங்கள் நிறுவனத்துக்கு இணையதளம் மூலமாக கடிதம் அனுப்பி, அதில் சுத்திகரிப்பு செய்வதற்கான பணி ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தில் தெரிவித்துள்ளனர். அப்படி செய்தால் எங்களுக்கு குறைந்தது 90 நாட்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு கட்டண பாக்கி கொடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு திடீரென்று வேலை செய்ய வேண்டாம் என்று நிறுத்துவது முறையல்ல. இதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வேறு நபரை வைத்து சுத்திகரிப்பு நிலையத்தை இயக்க முயற்சி நடக்கிறது’ என்றார்.
நேற்று மாலை வரை ஆண்டிப்பாளையம் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். மத்திய போலீசாரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.