அமைச்சர் ஆதரவாளர் கொலையில் மேலும் 4 வாலிபர்கள் கைது

அமைச்சர் ஆதரவாளர் கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-02-05 23:51 GMT
பாகூர்,

கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 36). அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளரான இவர் கடந்த 31-ந்தேதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாம்பசிவத்தின் மாமா வீரப்பன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சாம்பசிவம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

4 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கத்தை சேர்ந்த அமுதன், கூடப்பாக்கம் அன்பு உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் அமுதன், அன்பு, பாக்கியராஜ் ஆகியோரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கூடப்பாக்கம் மணிபாலன் (22), சார்லஸ் (21), கவியரசு (21), வழுதாவூர் ஜெகன் (21) ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

கூலிப்படை

இவர்கள் அபிஷேகப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து, கைது செய்தனர். இவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு சாம்பசிவத்தை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்