பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடிக்கு மத்தியில் கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம் 10 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க மேலிடம் உத்தரவு
அதிருப்தி எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் கர்நாடக மந்திரிசபை இன்று (வியாழக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
போட்டியிட அனுமதி
இதனால் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்தது. இந்த கூட்டணி அரசு 14 மாதங்கள் ஆட்சி நடத்தியது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. அந்த இரு கட்சிகள் பிறப்பித்த கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
10 பேர் மந்திரிகளாக...
அதன் பிறகு சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த ஆண்டு(2019) டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு பிறகு மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா முடிவு செய்துள்ளார். மந்திரிசபை விஸ்தரிப்பு இன்று (வியாழக்கிழமை) செய்யப்படுகிறது. கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெறும் விழாவில் 10 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். மந்திரியாக பதவி ஏற்க உள்ளவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ரமேஷ் ஜார்கிகோளி
2. பி.சி.பட்டீல்
3. எஸ்.டி.சோமசேகர்
4. ைபரதி பசவராஜ்
5. கோபாலய்யா
6. நாராயணகவுடா
7. சிவராம் ஹெப்பார்
8. ஸ்ரீமந்த் பட்டீல்
9. சுதாகர்
10. ஆனந்த்சிங்
பதவிப்பிரமாணம்
இவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு கேபினட் அந்தஸ்துடன் டெல்லி பிரதிநிதி பதவி வழங்க எடியூரப்பா முன்வந்துள்ளார். ஆனால் இதை மகேஷ் குமட்டள்ளி நிராகரித்துள்ளதாக தெரிகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்குவதாக இருந்தது. இதற்கு பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கும் பதவி வேண்டும் என்று கோரி கட்சி எச்சரிக்கையையும் மீறி பெங்களூருவில் 2 நாட்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கல்யாண (ஐதராபாத்)-கர்நாடக பகுதியை சேர்ந்தவர்கள்.
மந்திரி பதவி வேண்டாம்
மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கருதும் பா.ஜனதா மேலிடம், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த 10 பேருக்கு மட்டும் மந்திரி பதவி அளிக்குமாறும், வேறு யாருக்கும் தற்போதைக்கு மந்திரி பதவி வழங்க வேண்டாம் என்றும் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்ட உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஷ்வர் ஆகியோரை எடியூரப்பா நேற்று தனது வீட்டிற்கு அழைத்து பேசினார். பா.ஜனதா மேலிடம் கூறிய தகவலை அவர்களிடம் எடியூரப்பா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பரபரப்பு
இந்த நிலையில் 10 பேர் இன்று மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. 13 பேர் மந்திரியாக பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியான நிலையில் 10 பேருக்கு மட்டும் மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.