பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் அமைந்துள்ளது. அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் பிறகு அவர், கீழ்கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரினார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி நித்யானந்தாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.
ஜாமீன் ரத்து
இந்த நிலையில் அந்த மனு கடைசியாக கடந்த 3-ந் தேதி ஐகோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், நித்யானந்தா ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசு, அவரது சீடரிடம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு 5-ந் தேதி (நேற்று) வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு நேற்று கூடியது. நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, தீர்ப்பை வெளியிட்டு, நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்தார்.
கைது செய்ய...
இதையடுத்து கர்நாடக போலீசார் நித்யானந்தாவை கைது செய்ய தயாராகி வருகிறார்கள். ெவளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவருக்கு ஏற்கனவே ‘புளு கார்னர்’ நோட்டீசு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.