சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.;

Update: 2020-02-05 22:45 GMT
சிவகிரி, 

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இனாம் கோவில்பட்டி சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சோலையப்பன் மகன் ஆனந்தராஜ் (வயது 29). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு திருவேங்கடம் அருகே உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவரது ஊருக்கு மேற்கே தென்னந்தோப்பு உள்ளது. இங்கு இவர் தான் தினமும் சென்று தென்னை மரங்களுக்கு மோட்டார் பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தார். 

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் அவர் மோட்டார் பம்புசெட்டிற்கு மின் ஒயர் செல்லும் இரும்பு குழாயை பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தோப்புக்கு சென்ற ஆனந்தராஜ் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை அங்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு ஆனந்தராஜ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஆனந்தராஜிக்கு அபிராமி என்ற மனைவியும், சோகன் ஹரீஷ், சோலை கணேஷ் என்ற மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்