பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து எல்.ஐ.சி. அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு எடுத்ததை கண்டித்து கரூரில் எல்.ஐ.சி. அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-02-05 04:45 GMT
கரூர்,

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) பங்குகளில் ஒரு பகுதி தனியாருக்கு விற்கப்படும் என மத்திய பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவினை கண்டித்து கரூர் மேற்கு பிரதட்சணம் ரோடு, திருவிகா ரோடு, அரவக்குறிச்சி, குளித்தலை உள்பட 5 பகுதிகளில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என 250 பேர் நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, 1 மணி நேரம் பணியை புறக்கணிப்பு செய்தனர்.

இதன் காரணமாக இந்த அலுவலகங்கள் ஒரு மணி நேரம் வெறிச்சோடி காணப்பட்டது. மதியத்துக்கு பின்னர் எல்.ஐ.சி. அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

இதற்கிடையே கரூர் மாவட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கம், எல்.ஐ.சி. களப்பணியாளர் சம்மேளனம், எல்.ஐ.சி. முகவர்கள் சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு சார்பில் கரூர் மேற்குபிரதட்சணம் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவா தொடங்கி வைத்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாகி சிவராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன், எல்.ஐ.சி. களப்பணியாளர் சம்மேளனத்தின் முன்னாள் கோட்ட தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் பலர் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு நிதி திரட்டி தரும் எல்.ஐ.சி.யின் பங்கு தனியாருக்கு விற்பனை என்பது தேசவிரோத செயல் ஆகும். 5 ஆண்டு திட்டங்களுக்கு ரூ.35 லட்சம் கோடி எல்.ஐ.சி. மூலம் அளிக்கப்படுகிறது. 64 ஆண்டுகளாக அனைத்து மக்களின் சேமிப்பையும் அரசிற்கு பயன்பட வழிவகை செய்து வரும் எல்.ஐ.சி.யை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஏற்கனவே நிதி பற்றாக்குறை ரூ.8 லட்சம் கோடி என கூறப்படுகிறது. இந்தநிலையில் எல்.ஐ.சி. பங்குகளையும் தனியாருக்கு விற்கப்பட்டால் என்னவாகும் இந்தியா?. எனவே எல்.ஐ.சி. பங்கு விற்பனை குறித்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுக்காப்பீட்டு நிறுவனத்தின் சங்க உறுப்பினர் ஸ்ரீவித்யா, கரூர் வைஸ்யா வங்கியின் அகில இந்திய பொது செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கிற போது எல்.ஐ.சி. துணை நின்று முதலீடு வழங்குகிறது. 40 கோடி பாலிசிதாரர்கள் எல்.ஐ.சி.யில் உள்ளனர். காப்பீட்டு துறையில் 70 சதவீதத்துக்கும் மேலான பங்குகளை கொண்டது எல்.ஐ.சி. ஆகும். இதனை விற்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. தனியாருக்கு விற்றால் அவர்கள் மட்டுமே அதிக லாபம் பெறுவர். ஏறக்குறைய ஒரு லட்சம் ஊழியர்கள், 12 லட்சம் முகவர்கள் எல்.ஐ.சி.யில் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்