கூடலூர் அருகே, பாலம் கட்டக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
கூடலூர் அருகே பாலம் கட்டக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சேரன் நகரில் பாலம் உடைந்தது. இதனால் கூடலூரில் இருந்து சேரன் நகர் வரை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் சேரன் நகரில் இருந்து எல்லமலை, பெரியசோலைக்கு அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூரில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் ஆரோட்டுப்பாறை வழியாக பெரியசோலைக்கு இயக்கப்படுகிறது. இதனால் சேரன் நகர், எல்லமலை, பெரியசோலை பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அப்பகுதியில் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேரன் நகரில் இருந்து கூடலூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சை பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று காலை 8½ மணிக்கு திடீரென மறித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள பாலத்தை விரைவாக கட்டி போக்குவரத்து அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நியூகோப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிட முடியும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் தாசில்தார் சங்கீதாராணி, போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் பணிகள் விரைவாக தொடங்கப்படும். அதுவரையில் சீபுரத்தில் இருந்து எல்லமலை, பெரியசோலைக்கு இணைப்பு பஸ் விட ஏற்பாடு செய்யப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். இதை ஏற்று பகல் 11 மணிக்கு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கூறும்போது, பாலம் உடைந்துள்ளதால் 5 மாதங்களாக போக்குவரத்து இயக்கப்பட வில்லை. இதற்கு பதிலாக வேறு பாதையில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. தற்போது அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தவறும்பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.