உளுந்தூர்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்: பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சமாக நடந்து கொண்ட பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தையல்கடைக்காரர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குபட்டது அம்மச்சார் கோவில் தெரு. இந்த தெருவை ஆக்கிரமித்து நடைபாதை வியாபாரிகள் பூக்கடை, பழக்கடை என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த தெருவில் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையறிந்த பேரூராட்சி அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக அம்மச்சார் கோவில் தெருவில் உள்ள கடைகளை கடந்த 2 நாட்களாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
இதைபார்த்த வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், ஒருதலைபட்சமாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு திடீரென உளுந்தூர்பேட்டை-சென்னை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் தையல்கடை நடத்தி வந்த ரவி என்பவர் தனது கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தன்மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளுந்தூர்பேட்டை போலீசார் ரவியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கியதுடன், அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதிகாரிகள் சென்றதை பார்த்த வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.