காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 ரவுடிகள் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் 15 ரவுடிகளை கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரிய காஞ்சீபுரம், சின்ன காஞ்சீபுரம், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையங்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், சோமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் 15 ரவுடிகளை கைது செய்தனர். மேலும் குற்றப்பின்னணி உள்ள 19 குற்றவாளிகள் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றச்செயல்களில் இருந்து திருந்தி ஒழுக்கமாக வாழ எச்சரித்து அவர்களிடம் இருந்து ஓராண்டுக்கு எழுத்து மூலமாக நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டது.
மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.