யாருக்கும், எந்த வயதிலும் புற்றுநோய் வரலாம்: ‘புகையிலை பொருட்கள் பழக்கமில்லாத கட்டுப்பாடான வாழ்க்கை தேவை’ டாக்டர் வி.சாந்தா பேச்சு
‘புற்றுநோய் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம் என்பதால் புகையிலை பொருட்கள் பழக்கமில்லாத கட்டுப்பாடான வாழ்க்கை முறை தேவை’என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறினார்.
சென்னை,
சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவையொட்டி தேசிய மாணவர் படையை சேர்ந்த 50 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி மருத்துவமனையில் இருந்து தொடங்கி, பல்வேறு வழிகளில் சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது.
அதேபோல் சென்னையில் உள்ள முக்கியமான 25 போக்குவரத்து சிக்னல்களிலும் புற்றுநோய் தடுப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டன.
பயம், சாவு மனநிலை
தொடர்ந்து மருத்துவமனை கலையரங்கத்தில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுடன் மருத்துவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா தொடங்கி வைத்து பேசியதாவது:-
உலக புற்றுநோய் தினத்தையொட்டி ஆண்டு தோறும் நோயில் இருந்து குணமடைந்தவர்களை அழைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எதற்காக நடத்தப்படுகிறது? இதன் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. புற்றுநோய் என்றாலே பயம் மற்றும் சாவும் ஏற்பட்டுவிடும் என்ற மனநிலையில் தான் பொதுமக்கள் உள்ளனர். புற்றுநோயை பொருத்தவரையில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம். ஆனால் நம் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தால் இந்த நோய் வராமல் தடுக்க முடியும். இதனை முற்றிலும் தடுப்பதற்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மாநிலம் முழுவதும் நோயாளிகளை நோயில் இருந்து விடுவிப்பதற்காக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு மையங்களை திறந்து விழிப்புணர்வு அளித்து வருகிறது.
புகையிலை மூலம் 40 சதவீதம்
ஆரம்ப நிலையில் புற்றுநோய் இருப்பது கண்டறிந்தால் அதனை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும். புகையிலை பொருட்கள், மதுபானம் ஆகியவற்றை அறவே தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயை முற்றிலும் தடுக்க முடியும். மாறாக புகையிலை பொருட்களை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது.
புற்றுநோய் மட்டுமின்றி பிற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம் உள்ளது. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் புகையிலை பழக்கம் உடையவர்கள்.
செயற்கை மார்பக உறுப்பு
உடல் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் புற்றுநோய்கான அறிகுறிகளை கண்டு்பிடிக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்தால் பலன் அதிகரிக்கும். பொதுவான சில புற்றுநோய்களான வாய் மற்றும் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு, முந்தைய நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதேபோல் மார்பக புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறிந்தால் மார்பகங்களை அகற்றாமலேயே நோயை குணப்படுத்த முடியும்.
புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் உட்பட அனைவரும் புகையிலை பொருட்களை எந்த ரூபத்திலும் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். தற்போது மார்பகங்களை அகற்றியவர்களுக்கு செயற்கை மார்பக உறுப்பு முதல் கட்டமாக 5 பேருக்கு வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புற்றுநோய் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை அகற்றியவர்களுக்கு செயற்கை மார்பக உறுப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் எச்.சி.எல். பவுண்டேஷன் துணை மேலாளர் நியூட்டன் ராஜ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக டாக்டர் வி.சுரேந்திரன் வரவேற்றார். டாக்டர் சி.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.