தலையில் கல்லை போட்டு பழ வியாபாரி படுகொலை கொலையாளி சைக்கோவா? போலீசார் விசாரணை

சேலம் பழைய பஸ்நிலைய வணிக வளாகத்தில் தலையில் கல்லை போட்டு பழ வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி சைக்கோவா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-02-04 23:00 GMT
சேலம்,

சேலம் பழைய பஸ் நிலையத்தில் வணிக வளாகம் உள்ளது. இதை சுற்றி ஏராளமான கடைகள் உள்ளன. இரவு நேரங்களில் மூடப்பட்ட கடைகளின் ஓரத்தில் முதியவர்கள் சிலர் படுத்து தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில் திருமணிமுத்தாறு எதிரே வணிக வளாகத்திற்குள் செல்லும் பகுதியில் உள்ள ஒரு கடையின் வாசல் பகுதியில் நேற்று காலை முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலைக்கு அருகில் ஒரு பெரிய கல் கிடந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற சிலர் சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிணமாக கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழ வியாபாரி

பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் சேலம் பொன்னம்மாபேட்டை, சடகோபன் தெருவை சேர்ந்த அங்கமுத்து (வயது 85) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்து உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் டீக்கடையும், மற்றொருவர் பழக்கடையும் வைத்து நடத்தி வருகின்றனர்.

வயது முதிர்வு காரணமாக அங்கமுத்து சமீபகாலமாக பழ வியாபாரம் செய்வது இல்லை. இதனால் அவ்வப்போது 2 மகன்கள் வீட்டிற்கு சென்று வந்ததும், பல நேரங்களில் வீட்டிற்கு செல்லாமல் பழைய பஸ் நிலைய வணிக வளாகத்தில் படுத்துக்கொள்வதும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு செல்லாமல் வணிக வளாகத்தில் அவர் படுத்து தூங்கி உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முதியவர் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

தீவிர விசாரணை

இதுபற்றி சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கொலை செய்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலையாளி சைக்கோவா?

சேலம் மாநகரில் நடக்கும் தொடர் கொலைகள் குறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

சேலம் காசக்காரனூர் பகுதியில் நடந்த கொலை குறித்து அந்த பகுதியில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முதியவரை கொலை செய்தது பதிவாகி உள்ளது. அதில் பதிவாகி உள்ள வாலிபரை பார்க்கும் போது அவர் சைக்கோவாக இருப்பது போல் தெரிகிறது. எனவே பணத்திற்காக இரவு நேரத்தில் சாலையோரம் படுத்து தூங்கிக்கொண்டிருப்பவர்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் இந்த கொலையாளி சைக்கோவாக இருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே மேலும் கொலை சம்பவம் நடக்காமல் இருக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினர்.

தீவிர ரோந்து பணி 

பழ வியாபாரியை கொன்ற குற்றவாளியாக கருதப்படும் சைக்கோவை பிடிக்க மாநகரம் முழுவதும் போலீசார் உ‌ஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவில் அந்தந்த போலீசார் உயர் அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரத்தில் படுத்து தூங்குபவர்களை இந்த கொலையாளி தாக்கி விடக்கூடாது என்பதற்காக அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்