பீதர் தனியார் பள்ளியில் பிரதமர் மோடியை விமர்சித்து நாடகம்: தேசத்துரோக வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரம்
பீதரில் உள்ள தனியார் பள்ளியில் பிரதமர் மோடியை விமர்சித்து நடத்தப்பட்ட நாடகம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகம்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள பீதர் மாவட்டத்தில் சாஹீன் பள்ளி உள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு நாடகம் குழந்தைகளால் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் மேற்பார்வையிட்டார்.
இது தொடர்பாக பீதர் போலீசார் அந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியை மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆசிரியை பரீதா பேகம் மற்றும் நாடக உரையாடலை எழுதிய ஒரு குழந்தையின் தாயார் நபுன்னிசா ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பள்ளி ஊழியர்கள், நாடகத்தில் நடித்த குழந்தைகளிடம் போலீசார் கடந்த முறை சீருடையில் வந்து விசாரணை நடத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விசாரணை தீவிரம்
இந்த நிலையில் பீதர் போலீசார் நேற்று சாதாரண உடையில் வந்து பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் குழந்தைகளிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பள்ளி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘இன்று (அதாவது நேற்று) காலை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளுடன் 3 போலீசார் வந்தனர். அதன் பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டு எச்.பசவேஸ்வரா வந்தார். போலீசார் சாதாரண உடையில் வந்திருந்தனர். அவர்கள் விசாரணை நடத்தினர்’’ என்றார்.