துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.25 லட்சம் மோசடி முகநூல் தோழியிடமும் ரூ.12 லட்சத்தை இழந்தார்
துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதனை கண்டுபிடித்து தருவதாக கூறிய முகநூல் தோழியிடமும் ரூ.12 லட்சத்தை அவர் இழந்தார்.
பெங்களூரு,
பெங்களூரு மாகடி ரோட்டில் வசித்து வருபவர் மோகன் ராவ் (வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயதில் மகள் உள்ளனர். இந்தநிலையில் இவருடைய செல்போனுக்கு நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், துபாயில் நல்ல சம்பளத்தில் வேலை ஒன்று இருப்பதாகவும், குடும்பத்துடன் அங்கு தங்கி வேலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதற்கு ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இதனை நம்பிய மோகன் ராவ், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.25 லட்சத்தை மனைவிக்கு தெரியாமல் அனுப்பி உள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.
ரூ.12 லட்சத்தை இழந்தார்
இந்த நிலையில் தான் மோசடி செய்யப்பட்டது பற்றி மோகன்ராவ், முகநூலில் (பேஸ்புக்) நட்பாக பழகி வந்த லூசி என்ற பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், மோசடி சம்பவங்கள் அனைத்தும் ‘டார்க் நெட்’ மூலமாக நடைபெறுவதாகவும், அந்த ‘டார்க் ெநட்’ மூலம் மோசடி செய்தது யார் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்றும் கூறி உள்ளார். மேலும் இதனை கண்டுப்பிடிக்க ரூ.12 லட்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் மோகன் ராவ், தனது வீட்டை விற்று அந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்தை செலுத்தி உள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணையும், மோகன் ராவால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் மீண்டும் மோசடி செய்யப்பட்டது மோகன் ராவுக்கு தெரியவந்தது.
விவாகரத்து கேட்டு மனு
இதுகுறித்து மோகன் ராவ், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, துபாயில் வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றியவரும், முகநூலில் ‘லூசி’ என்ற பெயரில் பழகியவரும் ஒரே நபராக இருக்கலாம் என்று சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, தனது கணவர் ரூ.37 லட்சத்தை இழந்தது பற்றி அறிந்ததும் அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் தனது மகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும், மோகன் ராவிடம் விவாகரத்து கேட்டு அவர் கோர்ட்டில் மனு தாக்கலும் செய்துள்ளார்.