மத்திய சிறையில் மோதலில் ஈடுபட்ட ரவுடிகள் உள்பட 7 பேர் மீது வழக்கு

காலாப்பட்டு மத்திய சிறையில் மோலில் ஈடுபட்ட ரவுடிகள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-02-04 22:45 GMT
காலாப்பட்டு,

புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இங்குள்ள ரவுடிகள், தாதாக்கள் சிலர் செல்போன் மூலம் வெளியில் உள்ள தங்களது ஆதரவாளர்கள் உதவியுடன் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக கூறப்படுகிறது.

சிறையில் பல தாதாக்கள் உள்ள நிலையில் யார் பெரியவர்? என்கிற ரீதியில் அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி கைதிகள் விக்கிராய், அஸ்வின் ஆகியோருக்கு இடையே யார் பெரியவன் என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

வார்டன் மீது தாக்குதல்

அப்போது கைதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பிகள், உருட்டுகட்டைகளால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலை தடுக்க முயன்ற வார்டன் ஜீவாரத்தினம் மற்றும் கைதிகள் விக்கிராய், ரிஷிகுமார் ஆகியோர் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.

7 பேர் மீது வழக்கு

சிறையில் நடந்த இந்த மோதல் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறை சூப்பிரண்டு கோபிநாத் புகார் செய்தார்.

அதன்பேரில் மோதலில் ஈடுபட்ட கைதிகள் ரிஷிகுமார், லோகநாதன், அனந்தராமன், பிரதீப்ராஜ், ரமணன், விக்கிராய், டிராக் சிவா ஆகிய 7 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் டிராக் சிவா, விக்கிராய் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்