கும்மிடிப்பூண்டி அருகே ரூ.20 லட்சம் எரிசாராயம் அழிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பாலத்தின் கீழ் கொட்டி பாதுகாப்பாக அழித்தனர்.

Update: 2020-02-04 23:00 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் தமிழக அரசின் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி திருச்சி மற்றும் மதுரை மண்டல மத்திய புலனாய்வு பிரிவு மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மத்தியபிரதேசத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த உருளைகிழங்கு லாரி ஒன்றில் 500 பிளாஸ்டிக் கேன்களில் கடத்தி வரப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சிக்கியது.

இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர்களான புதுச்சேரியை சேர்ந்த சூசைநாதன் (வயது 56), திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த சத்யராஜ் (30) மற்றும் மதுராந்தகத்தை சேர்ந்த சங்கர் (52) ஆகியோரை கைது செய்தனர்.

அழிப்பு

விசாரணையில், லாரி மத்தியபிரதேச மாநிலம் கூர்கன் என்ற இடத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் செல்வது தெரியவந்தது.

பிடிபட்ட 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். நேற்று கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள ஏழுகண் பாலத்தின் கீழ் மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில் மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் தலைமையில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலையில் கொட்டி தீ வைத்து பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்