நாகர்கோவில் அருகே பரபரப்பு: 7 மாணவர்களை காரில் கடத்திய அரசியல் பிரமுகர் - போராட்டத்தில் கூட்டத்தை காண்பிக்க ஆள்பிடித்து சென்றது அம்பலம்

நாகர்கோவில் அருகே 7 மாணவர்களை காரில் கடத்திய அரசியல் பிரமுகர் சிக்கினார். கட்சியின் போராட்டத்தில் கூட்டத்தை காண்பிக்க மாணவர்களை அழைத்துச் சென்றது அம்பலமானது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-02-04 08:00 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தாழக்குடியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி அருகருகே உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை 8.45 மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சென்றபடி இருந்தனர். அப்போது அரசு தொடக்கப்பள்ளி பகுதியில் சொகுசு கார் வந்து நின்றது. பின்னர் திடீரென 7 மாணவர்கள் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றப்பட்டனர். மாணவர்கள் பயத்தில் அலறவே, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் அங்கிருந்து கிளம்பியது.

காரில் வந்த சிலர், மாணவர்களை கடத்தி செல்வதாக அங்கு பரபரப்பு உருவானது. நேரில் பார்த்த மாணவர்களும் அதனை பதற்றத்துடன் கூறவே, இந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியது. அங்குள்ள மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. உடனே பள்ளி முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

மாணவர்களின் தாயும், தந்தையும் பதற்றத்துடன் பள்ளிக்கூடத்துக்கு ஓடி வந்தனர். என்னுடைய மகனுக்கு என்னாச்சு என ஒவ்வொரு பெற்றோரும் கதறி அழுதபடி விசாரித்தனர். அதே சமயத்தில், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மாணவர்கள் கடத்தல் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆங்காங்கே வாகன சோதனையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. சந்தேகத்திற்கிடமான கார் வருகிறதா? என்பதை கண்காணித்தனர்.

இதற்கிடையே அரசு பள்ளி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அரசியல் கட்சி கொடி கட்டப்பட்ட கார் ஒன்று பள்ளி முன்பு வந்து நிற்பதும், அந்த காரில் மாணவர்கள் கடத்தப்பட்ட காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இதனையடுத்து போலீசார் துரித விசாரணை நடத்தினர். இதில், மாணவர்களை கடத்திய கார் தாழக்குடி பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகருக்கு சொந்தமானது என்ற தகவல் வெளியானது. மேலும், 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதனை கண்டித்து அந்த கட்சியினர் நேற்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அந்த போராட்டத்தில் கூட்டத்தை காண்பிக்க மாணவர்களை அரசியல் கட்சி பிரமுகர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றது தெரியவந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாகர்கோவிலில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 7 மாணவர்களும் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டது. உடனே போலீசார் அவர்களை மீட்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மூலம் தாழக்குடி பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றனர்.

ஏற்கனவே பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் பெற்றோர் பதற்றத்துடன் இருந்தனர். போலீஸ் வாகனத்தில் மாணவர்கள் வந்திறங்கியதை பார்த்ததும், அவரவரின் பெற்றோர் ஓடி வந்து கட்டி, தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். பின்னர் மாணவர்களை கடத்தி சென்ற அரசியல் கட்சி பிரமுகர் போலீஸ் வாகனத்தில் இருக்கிறாரா? என்று பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

மாணவர்களை கடத்திய நபர் எங்கே? அவரை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வராதது ஏன்? என போலீசாரை பெற்றோர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உருவானது. மேலும் பள்ளிக்கூட கேட்டையும் பூட்டினர். அப்போது, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உங்களுடைய புகாரை சம்பந்தப்பட்ட ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் கொடுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர்.

மாணவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தால் சுமார் 2½ மணி நேரம் தாழக்குடி அரசு பள்ளி முன்பு பரபரப்பாக காணப்பட்டது. மாணவர்களை மீட்ட பிறகு தான் அங்கு இயல்பு நிலை திரும்பியது.

மேலும் இதுதொடர்பாக 7 மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. தாழக்குடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மரிய பிரான்சிஸ் என்பவரும் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆள்பிடிக்க அரசியல் பிரமுகர் மாணவர்களை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்