குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் - எச்.ராஜா வலியுறுத்தல்
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட அனுமதிஅளிக்காமல் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து சிவகங்கை சண்முக ராஜா கலையரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் தனசேகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:- மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் என்பது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சாதாரண சட்டமாகும். இந்த சட்டத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மத ரீதியாக பாதிக்கப்பட்டு அகதியாக இந்தியா வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் வாழும் எந்த சமூகத்திற்கும் பாதிப்பில்லை.
தற்போது நடைபெறும் போராட்டம் தேசத்திற்கு விரோதமான போராட்டம் என்பதை தி.மு.க., காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்கள் புரிந்துகொண்டனர். இந்த பிரச்சினையை வைத்து எதிர்க் கட்சிகள் இந்தியாவிற்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றனர். எனவே மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நாகேந்திரன், கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, இணை பொறுப்பாளர் ராஜேந்திரன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சொக்கலிங்கம், மாவட்ட செயலாளர்கள் உதயா, ஜெயசக்கரவர்த்தி, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் ராம்பிரபு, செயலாளர் நாகேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர இளைஞரணி தலைவர் மயில்வாகனன் நன்றி கூறினார். அதன் பின்னர் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்காமல் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்குரிய பட்ஜெட் ஆகும். தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.