நெல்லையில், போலி ரூபாய் நோட்டுகள் கொடுத்து தொழில் அதிபரிடம் ரூ.12½ லட்சம் மோசடி - 2 பேர் சிக்கினர்
நெல்லையில் போலி ரூபாய் நோட்டுகள் கொடுத்து தொழில் அதிபரிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த 2 பேர் சிக்கினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெல்லை,
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருமாள்புரம் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 2 பேர் ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாக வைத்திருந்தனர். அதனை ஒருவரிடம் கொடுத்த போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 3 பேரையும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வில்பிரியன். பால்பண்ணை நடத்தி வரும் தொழில் அதிபரான இவர் ஒரு கும்பலிடம் ரூ.1 கோடி கடன் வாங்கி தருமாறு கூறியுள்ளார். இதற்காக அந்த கும்பல் ரூ.12½ லட்சம் கமிஷன் தொகையாக கேட்டு உள்ளது. அவரும் கமிஷன் தொகையை கொடுத்து உள்ளார். ஆனால் கடன் தொகையை பகுதி பகுதியாக தான் தருவோம் என்று அந்த கும்பல் கூறியுள்ளது. அதன்படி அந்த கும்பல் நேற்று கத்தை, கத்தையாக போலி ரூபாய் நோட்டுகளை வில்பிரியனிடம் கொடுத்தனர். அதை வாங்கி பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது கருப்பு காகிதத்தில் 4 முனைப்பகுதியில் மட்டும் 500 ரூபாய் போன்று போலி நோட்டுகள் அச்சடித்து கொடுத்தது தெரியவந்தது. அந்த நோட்டுகளை குறிப்பிட்ட ஒரு திராவகத்தில் தடவினால் உண்மையான ரூபாய் நோட்டு கிடைத்து விடும் என்று கூறிஉள்ளனர்.
போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்தவர்கள் சிவகாசி திருத்தங்கலை சேர்ந்த முரளிதரன் (வயது 32), சங்கர் (31) என்பதும் தெரியவந்தது. இவர்கள் தயாள பிரபு என்பவர் தலைமையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் 2 பேரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.