தி.மு.க. ஆட்சியில் சென்னையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு சிலை அமைக்கப்படும் - செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தி.மு.க. ஆட்சியில் சென்னையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு சிலை அமைக்கப்படும் என்று திருச்செந்தூர் நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் உள்ள மண்டபத்தில் நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் சுடலை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்வி, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். எனவே விரைவில் தி.மு.க. ஆட்சி அமையும்போது, சென்னையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு சிலை அமைக்கப்படும். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவோம்.
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் அனைத்து வார்டுகளிலும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.