கோவை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வந்த 72 பேருக்கு தீவிர பரிசோதனை
சீனாவில் இருந்து வந்த 72 பேர் கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிங்கப்பூர், தாய் லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணி களும் கண்காணிக்கப் படுகிறார்கள்.
கோவை,
கொரோனா என்ற புதிய வகை வைரசால் சீனாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை வாளையாறு சோதனைச்சாவடி, ஆனைகட்டி, மீனாட்சிபுரம், வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழுவை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் கண்காணிப்பு பணியை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மருத்துவ குழுவில் ஒரு மருத்துவர், சுகாதாரத்துறை ஆய்வாளர் உள்பட 5 பேர் உள்ளனர். இவர்கள், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்கின்றனர்.
வாளையாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் பஸ் பயணிகள் மற்றும் அனைத்து வாகனங்களில் வருபவர்களிடம் தமிழக சுகாதாரத்துறை டாக்டர் ஜெகதீஷ், ஆய்வாளர் ரகுராஜன் தலைமையி லான மருத்துவ குழுவினர் காய்ச்சல், சளி தொல்லை இருக்கிறதா என விசாரிக்கின்றனர்.
மேலும், காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும். நோய் பரவுவதை தடுக்க தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும்.
சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்களை திருமண நிகழ்ச்சி, பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.
மேலும் கேரளாவில் இருந்து பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வரை எல்லை பகுதியில் மருத்துவ முகாம் தொடர்ந்து செயல்படும். தற்போது, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக சீனாவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா வழியாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைசேர்ந்த 72 பேர் கோவை வந்தனர். அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டனர்.
இவர்களில் 10 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்ற 62 பேர் திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையினர் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சிங்கப் பூர்,தாய்லாந்து ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கண்காணிக்கப்படு கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.