காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்று கூறிய பா.ஜனதா எம்.பி.க்கு காங்கிரஸ் கண்டனம் ‘ஆர்.எஸ்.எஸ். தான் வெள்ளையர்களுடன் கைகோர்த்து செயல்பட்டது’

பா.ஜனதா எம்.பி.அனந்த் குமார் ஹெக்டே பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். தான் வெள்ளையர்களுடன் கைகோர்த்து செயல்பட்டதாக மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கூறினார்.;

Update: 2020-02-03 23:24 GMT
மும்பை,

கர்நாடக மாநில பா.ஜனதா எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அனந்த்குமார் ஹெக்டே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சுதந்திர போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.

அவர் பேசுகையில், “காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது” என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இதுகுறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான பாலசாகேப் தோரட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

பாரதீய ஜனதா எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. இது பாரதீய ஜனதா தலைமையின் அறிவு திவாலாகிவிட்டதை காட்டுகிறது. அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தான் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டது.

இது பாரதீய ஜனதா கட்சியின் உண்மை முகத்தை அப்பலப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்