மந்திரி பதவி கேட்டு பா.ஜனதாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் போர்க்கொடி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி
கர்நாடக மந்திரிசபை வருகிற 6-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் மந்திரி பதவி கேட்டு பா.ஜனதாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்கள் ஆட்சி நடத்தியது.
போட்டியிட அனுமதி
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது.
கடும் ஏமாற்றம்
அதன் பிறகு சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த ஆண்டு(2019) டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார். ஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை விஸ்தரிப்பில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கியவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற எடியூரப்பா, கட்சி மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கியது.
மந்திரிசபை விரிவாக்கம்
இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பா வெளிப்படையாக தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது வருகிற 6-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அப்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 10 பேருக்கும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது. அதாவது மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவரை சமாதானப்படுத்தி கேபினட் அந்தஸ்துடன் வாரிய தலைவர் பதவியை வழங்குவதாக எடியூரப்பா உறுதியளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி பிரதிநிதி
இந்த நிலையில் எடியூரப்பாவை பெங்களூருவில் ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து, தனக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு எடியூரப்பா, மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி வழங்க இயலாது என்றும், வரும் நாட்களில் மந்திரிசபையை மாற்றி அமைக்கும்போது பதவி வழங்குவதாகவும், தற்போதைக்கு அவருக்கு கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதை ரமேஷ் ஜார்கிகோளி ஏற்கவில்லை என்று ெதரிகிறது.
இதற்கிடையே பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் லிம்பாவளி, உமேஷ்கட்டி ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. அவர்களுடன் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த சி.பி.யோகேஷ்வருக்கும் மந்திரி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்காற்றியதால் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளோம்
இதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டசபை மற்றும் மேல்-சபையில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மந்திரி பதவி வழங்குவது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த ராஜூகவுடா எம்.எல்.ஏ. தலைமையில் ஐதராபாத்-கர்நாடக பகுதியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விதான சவுதா அருகே எம்.எல்.ஏ.க்கள் பவனில் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு ராஜூகவுடா எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கல்யாண-கர்நாடக அதாவது ஐதராபாத்-கர்நாடக பகுதிக்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மந்திரிசபையில் இடம் வழங்க வேண்டும் என்று நாங்கள் முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளோம். சட்டசபை, மேல்-சபை உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மந்திரி பதவி வழங்குவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது சரியல்ல. எங்கள் பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இங்கு ஒன்று கூடி ஆலோசனை நடத்தினோம். இதில் என்ன தவறு உள்ளது. இது கட்சி கட்டுப்பாட்டை மீறியது ஆகாது. நாங்கள் ரெசார்ட் ஓட்டலில் கூட்டம் நடத்தவில்லை. எங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம். மந்திரி பதவியை முதல்-மந்திரியிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது?. மீண்டும் நாங்கள் நாளை (அதாவது இன்று) இங்கு கூடி ஆலோசிக்க உள்ளோம். இதுகுறித்து நாங்கள் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து எங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு ராஜூகவுடா கூறினார்.
எடியூரப்பாவுக்கு நெருக்கடி
பா.ஜனதாவை சேர்ந்த நேரு ஹோலேகர், சீனிவாஸ்ஷெட்டி, எஸ்.அங்கார், கே.ஜி.போப்பையா, ராமதாஸ், கருணாகரரெட்டி, ரவீந்திரநாத், கூளிஹட்டி சேகர் என 10-க்கும் மேற்பட்டவர்கள் மந்திரி பதவி கேட்டுள்ளனர். இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது தவளகிரி இல்லத்தில் மந்திரி பதவி ஏற்கவுள்ள பைரதி பசவராஜ், நாராயணகவுடா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திப்பாரெட்டி, ராமதாஸ், நேரு ஹோலேகர் உள்ளிட்டோர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கத்தின்போது தங்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்றும், அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தி வெடிக்கும் என்று கூறப்படுகிறது.