சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி மதிய உணவு திட்ட ஊழியர்கள் போராட்டம் மந்திரியின் கோரிக்கையை ஏற்று வாபஸ் பெற்றனர்

சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு திட்ட ஊழியர்கள் நேற்று பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மந்திரியின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Update: 2020-02-03 23:12 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் 1.20 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி கர்நாடகம் முழுவதும் இருந்து மதிய உணவு திட்ட ஊழியர்கள் ஏராளமானோர் நேற்று பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது சுதந்திர பூங்கா பகுதியில் 144 தடை உத்தரவு இருப்பதாகவும், அதனால் பேரணி, போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

போராட்டம்

இதையடுத்து போராட்டக்காரர்கள் தடையை மீறி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மாதந்தோறும் 5-ந் தேதி சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்தநிலையில் அங்கு வந்த மந்திரி சுரேஷ் குமார், ‘‘உங்களுடைய கோரிக்கைகள் குறித்து மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்’’ என்று கூறினார். அவர் கூறியதை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், போராட்டத்தை கைவிட்டு ரெயில் மூலம் தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்