வீட்டு மனைகளுக்கு பட்டா தரவில்லை 48 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

வீட்டு மனை வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் அதற்கான பட்டா இதுவரை தரவில்லை என கடலூரில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் வடக்கு பாளையம் ஊராட்சியை சேர்ந்த 48 குடும்பத்தினர் கலெக்டர் அன்புசெல்வனிடம் மனு கொடுத்தனர்.

Update: 2020-02-03 23:00 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் வடக்குபாளையம் ஊராட்சி தலைவர் மாயவன் தலைமையில் 48 குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலெக்டர் அன்புசெல்வனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

19 மனைப்பிரிவுகளில்...

வடக்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு மாதாகோவில் தெரு, மேற்கு மாதாகோவில் தெரு ஆகிய 2 தெருக்களில் வசித்து வரும் 48 குடும்பத்தை சேர்ந்தவர்கள் 19 மனைப்பிரிவுகளில் வீடு மற்றும் குடிசைகள் அமைத்து குடிநீர், மின்சார வசதிகளுடன் வசித்து வருகிறோம். வீட்டு மனை வழங்கி பல ஆண்டுகளாகியும், இதுநாள் வரையிலும் பட்டா வழங்கவில்லை. இதனால் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வீடுகட்டும் திட்டம் போன்ற சில நலத்திட்ட உதவிகள் கிடைப்பது இல்லை.

குறிப்பிட்ட மனைப்பிரிவுகளில் வருவாய் கிராம பதிவேட்டின் படி பயிர்தொழிலாளர் சங்கம் வடக்குப்பாளையம் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தபோது அப்படி ஒரு சங்கம் அங்கே இல்லை என்பது தெரியவந்தது. நடைமுறைகளுக்கு காலதாமதம் ஆனதால் அப்போது மனைப்பட்டா பெற முடியாமல் போய் விட்டது. எனவே குறிப்பிட்ட மனைப்பிரிவுகளை நேரில் ஆய்வுசெய்து அங்கே குடியிருக்கும் நபர்களின் பெயரிலேயே மனைப்பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கு மாற்று இடம்

அதேபோல் பெரியக்குப்பம் கிராம தலைவர் வாசுதேவன் தலைமையில் துணை தலைவர் ரவி, பொருளாளர் குமரன் மற்றும் கிராம மக்கள் கலெக்டர் அன்புசெல்வனிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டின் வழியே பரவாறு அறுவா மூக்கு வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுவதால் திருச்சோபுரம் ஊராட்சியில் மாற்று இடம் வாங்கி தருவதை அறிந்தோம். ஆனால் இந்த இடம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நாளடைவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுடுகாடு, இடுகாடுகள் இடிந்து சேதம் அடைந்து விடும்.

மேலும் இது, ஊருக்கு அருகாமையில் அமைய இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி பெரியகுப்பம்-நஞ்சலிங்கம் பேட்டை சாலைக்கு மேற்கே சுடுகாடு, இடுகாடு அமைக்க இடம் வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்