ஆடு மேய்க்கச் சென்று மாயமான மாணவி, கிணற்றில் பிணமாக மிதந்தாள் போலீசார் தீவிர விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடு மேய்க்கச்சென்று மாயமான 4-ம் வகுப்பு மாணவி, கிணற்றில் பிணமாக மிதந்தாள். அவளது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Update: 2020-02-03 23:00 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள்கள் கோபிகாஸ்ரீ, வசந்த குருலட்சுமி. அங்குள்ள பள்ளியில் கோபிகாஸ்ரீ 8-ம் வகுப்பும், வசந்த குருலட்சுமி 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

2 நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் வீட்டிற்கு அருகே ஆடு மேய்க்க சென்றுள்ளனர். இந்த நிலையில் வீட்டுக்கு செல்வதாக தங்கையிடம் கூறிவிட்டு கோபிகாஸ்ரீ வீடு திரும்பினாள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வசந்த குருலட்சுமி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மல்லி போலீஸ் நிலையத்தில் அவளுடைய பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசாரும் மாணவியை தேடி வந்தனர்.

கிணற்றில் பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் மாணவி வசந்த குருலட்சுமி உடல் மிதந்தது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டனர்.

மகளை பிணமாக பார்த்த அதிர்ச்சியில் அவளுடைய பெற்றோர், குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தை பார்வையிட்டு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். பின்னர் வசந்த குருலட்சுமி உடலானது சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

காரணம் என்ன?

மாயமான மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவி சாவுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்