அமைச்சரின் ஆதரவாளர் தொல்லை கொடுத்ததால் கொலை செய்தோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

அமைச்சர் ஆதரவாளர் தொல்லை கொடுத்து வந்ததால் அவரை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2020-02-03 23:15 GMT
பாகூர்,

புதுவை பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 36). இவா் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளராக இருந்தார்.

இந்த நிலையில் சாம்பசிவம் அவருடைய தங்கை திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு கடந்த 31-ந் தேதி காரில் வந்து கொண்டிருந்தார்.

கிருமாம்பாக்கம் பள்ளிக்கூடம் அருகே கார் வந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் அவர் மீது வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும், கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த கொலையில் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அமுதன் (37) என்பவரின் தூண்டுதலின்பேரில் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பு என்கிற அன்பரசன் (38), நாகூரை சேர்ந்த பாக்கியராஜ் உள்பட 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சின்னகரையாம்புத்தூர் பகுதியில் அமுதன், அன்பரசன், பாக்கியராஜ் ஆகியோர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது அமுதன், அன்பரசன் ஆகியோரின் கை முறிந்தது. அவர்களை போலீசார் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான அமுதன், அன்பரசன் ஆகியோர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சாம்பசிவத்தின் மாமாவான காங்கிரஸ் பிரமுகர் வீரப்பன் ஊரில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்தோம். அதன்பின்னர் நாங்கள் ஊரில் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தோம்.. ஆனால் சாம்பசிவமும் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் அவருடைய மாமாவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக எங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. எனவே நாங்கள் முந்திக்கொண்டு அவரை கொலை செய்ய திட்டம் போட்டோம். அதற்கு எங்களது கூட்டாளிகள் பலர் உதவினார்கள்.

சாம்பசிவத்தை கொலை செய்ய 4 முறை முயற்சித்தோம். ஆனால் அதில் அவர் தப்பிவிட்டார். இறுதியாக கடந்த 31-ந் தேதி சாம்பசிவம் வருவதை அறிந்து கூட்டாளிகளுடன் இணைந்து அவரை கொலை செய்தோம். பின்னர் கரையாம்புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்தபோது போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தவழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, விஜயகுமார், சந்திரசேகர், இளங்கோ மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்