போலீசார் திட்டியதால் மின் கம்பியை பிடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை - உடலை வாங்க மறுத்து போராட்டம்

போலீசார் திட்டியதால் மின்கம்பியை பிடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-03 07:45 GMT
மதுரை, 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன்(வயது 45). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் அவனியாபுரத்திற்கு சென்றிருந்தார். அப்போது போலீசார் அவரை வழிமறித்து ஆட்டோவிற்கான ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது, போலீசார் அவரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஹரிச்சந்திரன் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே அவரது உடலை வாங்க மறுத்து அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பெரிய ஆஸ்பத்திரி முன்புள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்