சீனாவில் இருந்து வந்த திருவாடானை வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்
சீனாவில் இருந்து சொந்த ஊரான திருவாடானைக்கு வந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள தேளூர் பழங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர் சீனாவில் இருந்து சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் அருகில் பாண்டுகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடலில் ரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பதாக கூறி அவரை ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சையில் இருந்த அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இது குறித்து மாதவன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள வீடியோ காட்சியில் கூறியிருப்பதாவது:- சீனாவில் இருந்து கடந்த மாதம் 28-ந்தேதி சென்னைக்கு வந்தேன். நான் சீனாவில் இருந்து புறப்படும் போதே அங்கு என்னை சோதித்த பின்னர் தான் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இலங்கையில் சோதனை செய்தனர்.
பின்னர் சென்னையில் வந்து இறங்கி சொந்த ஊருக்கு சென்றேன். அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததில் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறினர். எங்கள் ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று காய்ச்சல் என்று தான் சொன்னேன். ஆனால் அங்கு பணியில் இருந்தவர்கள் நீங்கள் சீனாவில் இருந்து வந்து இருப்பதால் ராமநாதபுரம் சென்று அங்கு தான் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. மதுரைக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டனர். மேலும் அரசு மருத்துவமனையில் என்னிடம் இருந்து ரத்தம் சேகரித்து புனே நகரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் விவரம் தெரிந்த பின்னரே சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தம், நீர் போன்ற அனைத்து சோதனைகளும் செய்ததில் சாதாரண காய்ச்சல் என்று தகவல் தெரிவித்து அதற்கான சான்றுகளையும் வழங்கினர். இந்த நிலையில் என்னை போன்று சீனாவில் இருந்து வந்த நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாகவும், மருத்துவமனை சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் செய்தி வெளியானது. இதனால் இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி பெரிய அளவில் பேசப்படுகிறது. நான் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தான் இருக்கிறேன். எனக்கு சாதாரண காய்ச்சல் தான். எல்லா சோதனைகளும் செய்யப்பட்டு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.
தற்போது என்னை பற்றிய தவறான தகவல் பெரிய அளவில் பரவியதால் அதிகாரிகள் 10 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டும் என கூறுகின்றனர். எனக்கு இல்லாத ஒன்றை இருப்பதாக பொய்யான தகவலை பரப்பிவிட்டனர். இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். என்னை பற்றி வெளிவரும் தகவல் உண்மையல்ல. நான் நலமுடன் இருக்கிறேன். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.