தனுஷ்கோடி கடல் பகுதிக்கு, முதல் முறையாக 8 ஆயிரம் பிளமிங்கோ பறவைகள் வருகை - வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை

தனுஷ்கோடி கடல் பகுதியில் முதல் முறையாக 8 ஆயிரம் பிளமிங்கோ பறவைகள் வந்தன. இந்த பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-02-02 22:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ பறவைகள் வருவது வழக்கம்.

அது போல் இந்தாண்டும் கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல் பகுதிக்கு பிளமிங்கோ பறவைகள் வரத் தொடங்கின. 2 வாரத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த 2 நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான பிளமிங்கோ பறவைகள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்துள்ளது. இவை கோதண்டராமர் கோவிலின் மிக அருகாமையில் உள்ள கடல் பகுதியில் நின்று வருகின்றன. பிளமிங்கோ பறவைகள் கூட்டத்தை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இந்தநிலையில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்துள்ள பிளமிங்கோ பறவைகளை மர்ம நபர்கள் வேட்டையாடுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று மண்டபம் வனச்சரகர் வெங்கடேசன் தலைமையில் வனவர் ஆனந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் கோதண்டராமர் கோவில் கடல் பகுதியில் குவிந்திருந்த பிளமிங்கோ பறவைகளை பைனாகுலர் மூலம் பார்வையிட்டு கண்காணித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் வெங்கடேசன் கூறும் போது, தனுஷ்கோடி கடல் பகுதிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இந்த ஆண்டு வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் சீசனில் சுமார் 8 ஆயிரம் பறவைகள் வந்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த ஆண்டு 5 ஆயிரம் பறவைகள் மட்டும் வந்தன.

மற்ற பறவைகளை போல் பிளமிங்கோ பறவைகள் மீன்களை சாப்பிடாது. கடலில் உள்ள பாசிகளையே உணவாக உட்கொண்டு வாழும் ஒரு சைவ பறவையாகும். மற்ற பறவைகளை போல் மரங்களில் கூடு கட்டி வாழாது. தண்ணீரிலேயே நின்ற படியே தூங்கும். இங்கு மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே அதிகமான பிளமிங்கோ பறவைகள் வரும் பகுதி தனுஷ்கோடி தான். பிளமிங்கோ பறவைகளை யாரும் வேட்டையாடினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்