உறவினரிடம் பேச மனைவி மறுத்ததால் கத்தியால் குத்தி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை - கிணத்துக்கடவு அருகே பரிதாபம்
கிணத்துக்கடவு அருகே உறவினரிடம் பேச மனைவி மறுத்ததால் கத்தியால் குத்தி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணத்துக்கடவு,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சபரிராஜ் (வயது 45). கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி பரிமளம் (46). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு நெய்தலா என்ற மகள் உள்ளார். பரிமளம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்துவருகிறார். நெய்தலா கோவையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சபரிராஜுக்கு குடிப்பழக்கம் உண்டு.
இதனால் அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அவருடைய மனைவி பரிமளத்திடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் மது அருந்திவிட்டு சபரிராஜ் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவருடைய செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த செல்போனில் சபரிராஜ் பேசினார். இதில் உறவினர் ஒருவர் தன்னுடைய வீட்டு கிரகப்பிரவேசம் நடக்கிறது. அதனால் அனைவரும் வரவேண்டும் என்று கூறினார். அப்போது சபரிராஜ், என்னுடைய உறவினர் ஒருவர் செல்போனில் பேசுகிறார். அதனால் மனைவி பரிமளத்திடம் நீயும் பேசு என்று கூறி அவரிடம் செல்போனை கொடுக்க முயன்றார். அப்போது பரிமளம் செல்போனை வாங்க மறுத்ததோடு, பேசவும் மறுத்ததாக தெரிகிறது.
இதன்காரணமாக ஆத்திரமடைந்த சபரிராஜ், வீட்டு சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து திடீரென தனது உடலில் குத்தினார். இதனால் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சபரிராஜை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சபரிராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உறவினர் ஒருவரிடம் மனைவி பேச மறுத்ததால் கட்டிட ஒப்பந்ததாரர் தனக்குத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.