வங்கிக்கு தெரியாமல் குடோன் சீலை உடைத்து அடமானம் வைத்த முந்திரி மூட்டைகளை விற்று ரூ.98 லட்சம் மோசடி - வியாபாரிகள் உள்பட 7 பேர் மீது வழக்கு
வங்கிக்கு தெரியாமல் குடோன் சீலை உடைத்து முந்திரி மூட்டைகளை விற்று ரூ.98 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக வியாபாரிகள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரியபுறங்கணி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் செல்வலிங்கம். சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கலைமணி. முந்திரி வியாபாரிகளான இருவரும் நண்பர்கள். கடந்த 7.7.2018 அன்று பண்ருட்டியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் செல்வலிங்கமும், கலைமணியும் தலா 560 என்று மொத்தம் 1,120 முந்திரி மூட்டைகளை அடமானம் வைத்து ரூ.98 லட்சம் கடன் பெற்றனர்.
இதற்கு ஜாமீன்தாரர்களாக சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பரசுராமன், இவருடைய மனைவி கவிதா ஆகியோர் கையெழுத்திட்டனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள், கருக்கை கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் முந்திரி மூட்டைகளை வைத்து, அதனை பூட்டி சீல் வைத்தனர். அதன்பிறகு செல்வலிங்கம், கலைமணி ஆகியோர் கடனையும், வட்டியையும் வங்கியில் செலுத்தவில்லை.
இந்த நிலையில் வங்கி மேலாளர் முருகேசன் மற்றும் ஊழியர்கள், கருக்கை கிராமத்திற்கு சென்று முந்திரி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோனை பார்வையிட்டனர். அப்போது, சீல் வைக்கப்பட்ட பூட்டு உடைந்து கிடந்தது. உடன் அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு முந்திரி மூட்டைகள் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் விசாரித்தபோது, கடன் வாங்கியவர்கள் குடோன் சீலை உடைத்து அங்கிருந்த முந்திரி மூட்டைகளை எடுத்து விற்றதும், இதற்கு உடந்தையாக மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் செந்தாமரைக்கண்ணன், நெய்வேலியை சேர்ந்த ஆனந்தவேல் மகன் சசிக்குமார், ராமர் மகன் அமர்நாத் ஆகியோர் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் முருகேசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காடாம்புலியூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கிளை மேலாளர் முருகேசன், காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் முந்திரி வியாபாரிகளான செல்வலிங்கம், கலைமணி மற்றும் ஜாமீன்தாரர்கள் பரசுராமன், கவிதா, குடோனை உடைக்க உடந்தையாக இருந்த செந்தாமரைக்கண்ணன், சசிக்குமார், அமர்நாத் ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.