திண்டுக்கல் அருகே கண்காட்சி: பார்வையாளர்களை கவர்ந்த கிளிமூக்கு, விசிறிவால் சேவல்கள்

திண்டுக்கல் அருகே நடந்த கண்காட்சியில் கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

Update: 2020-02-02 22:15 GMT
திண்டுக்கல்,

உலக சேவல் அமைப்பின் திண்டுக்கல் கிளை மற்றும் அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் குழு சார்பில் சேவல் கண்காட்சி திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டியில் நடந்தது. உலக சேவல் அமைப்பின் திண்டுக்கல் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் நெல்சன், உஸ்மான், பிரபாத் ஆகியோர் மேற்பார்வையில் கண்காட்சி நடந்தது. இதில் திண்டுக்கல், கரூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு தாங்கள் வளர்க்கும் சேவல்களை காட்சிப்படுத்தினர்.

கண்காட்சியில் மயில், வெள்ளை, கீரி, செம்பொன்ரம், நூலான், செவலை, கிளிமூக்கு விசிறிவால் உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் இடம்பெற்றன. சேவல்களின் உடலமைப்பு, அவற்றின் வாலின் நீளம், மூக்கின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் 30 சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. கண்காட்சியில் இடம்பெற்ற சேவல்களின் எடை, வாலின் நீளம், முக அமைப்பு ஆகியவற்றை பொறுத்து அவற்றுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் செம்பொன்ரம் ரக சேவலுக்கு ரூ.6 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற சேவல்களுக்கு அவற்றின் தன்மையை பொறுத்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் கண்காட்சியை பார்வையிட துருக்கி, சவுதி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் சிலர் தாங்கள் வளர்த்து வரும் சேவல்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்களும், தங்களின் சேவல்களுடன் கண்காட்சியில் பங்கேற்றனர். கண்காட்சியில் இடம்பெற்ற சேவல்களில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

மேலும் செய்திகள்