எட்டயபுரம் அருகே பயங்கரம்: மூதாட்டி கற்பழித்துக் கொலை - மர்மநபருக்கு வலைவீச்சு
எட்டயபுரம் அருகே தோட்டத்துக்கு சென்ற மூதாட்டி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகிலுள்ள கீழஈரால் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி பாப்பா (வயது 60). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகள்கள் திருமணமாகி சென்று விட்டதால், காளியப்பனும், பாப்பாவும் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலை ஓரத்தில் ஊருக்கு அருகிலுள்ள தோட்டத்தில் பருத்தி எடுப்பதற்காக பாப்பா சென்று வந்தார்.
நேற்று காலையிலும் அவர் வழக்கம் போல் பருத்தி எடுப்பதற்கு தோட்டத்துக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் இரவு 7 மணி வரை அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
நேற்று இரவு 8 மணியளவில் தோட்டத்து பகுதிக்கு உறவினர்கள் சென்று அவரை தேடினர். அப்போது தோட்டத்துக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் உள்ள பாதயாத்திரை பக்தர்கள் தங்கி செல்வதற்காக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு பின்பகுதியில் பாப்பா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது உடைகள் கிழிக்கப்பட்டு அரைநிர்வாணமாக கிடந்தார். கல்லால் தாக்கி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அருகில் மது பாட்டில், சிகரெட் கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘பாப்பா தோட்டத்துக்கு செல்வதை நோட்டமிட்டு மர்மநபர் பின்தொடர்ந்து சென்று அவரை கொடூரமாக தாக்கி கற்பழித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரை கல்லால் மீண்டும் தாக்கி முகத்தை சிதைத்து விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கொலையாளி அதே பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே, பாப்பாவின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தோட்டத்துக்கு சென்ற மூதாட்டி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.