10-ம் வகுப்பு மாணவி தற்கொலை: பள்ளிக்கூட ஆசிரியை மீது வழக்கு

செய்துங்கநல்லூரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளிக்கூட ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.;

Update: 2020-02-02 21:45 GMT
ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவருடைய மகள் பேச்சியம்மாள் (வயது 15). இவர் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த பேச்சியம்மாள் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பள்ளியில் ஆசிரியை கண்டித்ததால்தான், பேச்சியம்மாள் பள்ளிக்கு செல்லவில்லை என்றும், எனவே அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பேச்சியம்மாளின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பள்ளியின் 10-ம் வகுப்பு கணித ஆசிரியையான பாளையங்கோட்டையை சேர்ந்த கேத்தரின் என்பவர் மீது செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவியின் உடலை அவரது உறவினர்கள் நேற்று பெற்றுக்கொண்டனர். மதியம் மாணவியின் உடல் செய்துங்கநல்லூரில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, குழந்தை ஏசு பள்ளி தாளாளர் ஜெயராணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாணவி பேச்சியம்மாள் தற்கொலை செய்து கொண்ட அன்றும், அதற்கு முன்தினமும் பள்ளிக்கு வரவில்லை. இதனை மாணவியை பள்ளிக்கு அழைத்து வரும் வாகன டிரைவர் உறுதி செய்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவியை ஆசிரியைகள் அடித்து துன்புறுத்தி வீட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக கூறுவது தவறு. இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து சில அமைப்புகள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஆசிரியை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறை இதுபோன்ற அழுத்தத்துக்கு பணியக்கூடாது. குழந்தைகள் நலனிலும், பாதுகாப்பிலும் மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார்.

அப்போது கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம், திருஇருதய சபை தலைவர் ரவி, உதவி தலைமை ஆசிரியை சவீதா, சபை உறுப்பினர் சவரீனா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்