புதுவை மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதல் தடுக்க முயன்ற 4 வார்டன்கள் படுகாயம்

புதுவை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற வார்டன்கள் 4 பேரை கைதிகள் தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த வார்டன்களும், கைதி ஒருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-02-03 00:17 GMT
புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள இது ஒரு மர்ம பிரதேசமாகவே உள்ளது.

இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறைக்கைதிகளே தங்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை கொண்டுவந்து சிறைக்குள் இருந்தபடி வெளியில் உள்ள தொழில் அதிபர்களையும் மிரட்டி கூட்டாளிகள் மூலம் பணம் பறித்து வருகின்றனர்.

பல தாதாக்கள் சிறையில் உள்ள நிலையில் அவர்களது ஆதரவாளர்களும் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு இடையே யார் பெரியவர்? என்கிற ரீதியில் அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

எனவே கைதிகள் அறையில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின்போது செல்போன்கள் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விக்கிராஜா, அஸ்வின் ஆகியோருக்கு இடையே யார் பெரியவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது.

அப்போது கைதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்புகம்பிகள், உருட்டுகட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கைதிகள் திடீரென மோதிக்கொண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வார்டன்கள் ஓடிச்சென்று கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றனர்.

அப்போது கைதிகள், வார்டன்களையும் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் கைதி விக்கிராஜா படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் சிறைக்காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்ட கைதிகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறைக்குள் நடந்த கைதிகள் மோதலை தடுக்க முயன்ற வார்டன்கள் ஜீவரத்தினம் (வயது 37), சக்கரவர்த்தி (34), பாவாடைசாமி (54), ரூபச்சந்திரன் (32) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலுக்கு என்ன காரணம்? என விசாரணை மேற்கொண்டனர். அப்போது கைதிகளில் யார் பெரியவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்