மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்கும் முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பேட்டி

மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்கும் என்று முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

Update: 2020-02-02 22:45 GMT
பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. எங்களை விட்டு பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது ஏன் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்புவார்கள். அதனால் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்கும். 17 எம்.எல்.ஏ.க்களை எடியூரப்பா ஆபரேஷன் தாமரை மூலம் தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டார். அவர்கள் அனைவருக்கும் கொடுத்த வாக்குறுதிப்படி மந்திரி பதவி வழங்க வேண்டும்.

அதனால் பா.ஜனதாவை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைவார்கள். ரமேஷ் ஜார்கிகோளி பிரச்சினையை உருவாக்கும் நபர். அவரை எடியூரப்பா எப்படி நிர்வகிப்பார் என்பதை ெபாறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர் எந்த இலாகாவை கேட்டாலும், அதில் சுயநலம் தான் இருக்குமே தவிர, பொதுநலன் இருக்க வாய்ப்பு இல்லை.

துணை முதல்-மந்திரி பதவி மீது ரமேஷ் ஜார்கிகோளி கண் வைத்திருந்தார். அது சாத்தியமில்லை என்று எடியூரப்பா கூறிய பிறகு அவர் தனது நடையை மாற்றிக்கொண்டுள்ளார். தனக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, முக்கிமான இலாகா ஒதுக்க வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். குறிப்பாக நீர்ப்பாசனத்துறையை தனக்கு வழங்க வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்து வருகிறார். இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

மேலும் செய்திகள்