ஏரலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

ஏரலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த கையெழுத்து இயக்கத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2020-02-02 23:00 GMT
ஏரல்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் ஏரல் நகர பஞ்சாயத்து அருகில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஏரல் காந்திசிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவர் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது;-

போராட்டம்

தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு நமது உணர்வை தெரியப்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட அப்பொழுதே மாணவர்கள், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதில் பல இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலைக்காக எத்தனை பேர்களோ போராடி உயிரை விட்டுள்ளார்கள். ஆனால் அப்படி பெற்ற விடுதலையை இந்த மத்திய அரசிடம் இழந்துவிடக்கூடாது.

குடியுரிமை திருத்த சட்டத்தினால் முஸ்லிம் சமுதாயம் மட்டும் அல்லாமல் இந்து உள்பட அனைத்து சமுதாய மக்களும், குறிப்பாக பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படகூடும். ஆகையால் நாம், நம் குடும்பத்தை பாதுகாத்து கொள்ள இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம், நம்மை பாதுகாத்து கொள்ள இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் ஏரல் பஜாரில் கடை, கடையாக ஏறி இறங்கி வியாபாரிகளிடம் கையெழுத்து வாங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் வாழவல்லான் மகராஜன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்பாளர் தமிழினியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்