எலியட்ஸ் கடற்கரையில் நடந்த ‘பிளாக்கத்தான்’ நிகழ்ச்சி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

சென்னை எலியட்ஸ் கடற்கரை முதல் திருவான்மியூர் வரை 5 கி.மீ. நீளத்துக்கு நடந்து, குனிந்து குப்பைகளை சேகரிக்கும் ‘பிளாக்கிங்’ உடற்பயிற்சியின் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ‘பிளாக்கத்தான்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.;

Update: 2020-02-02 22:15 GMT
சென்னை,

நடை பயிற்சி, சீரான ஓடு பயிற்சி மேற்கொள்ளும்போதே இடையே நின்று, குனிந்து, உட்கார்ந்து கோணிப்பையில் குப்பையை சேகரிக்கும் ஒரு உடற்பயிற்சி தொகுப்பு முறையே ‘பிளாக் கிங்’ ஆகும். இந்த புதுமையான குப்பை அள்ளும் விழிப்புணர்வு பயிற்சி கடந்த 2016-ம் ஆண்டு சுவீடன் நாட்டில் முதன் முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டது. தற்போது இது உலகளவில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ‘பிளாக்கிங்’ விளையாட்டின் மூலம் உடலை வளைத்தல், நீட்டுதல், உட்காருதல், குதித்தல் மற்றும் நடத்தல் போன்ற செயல்கள் இருப்பதால், உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும், முக்கியமாக ஓடுவது, நடப்பது போன்ற உடற்பயிற்சியைவிட சிறந்த பயிற்சியாகவும் உள்ளது.

அதன்படி, சென்னை எலியட்ஸ் கடற்கரை முதல் திருவான்மியூர் வரை 5 கி.மீ. நீளத்துக்கு நடந்து, குனிந்து குப்பைகளை சேகரிக்கும் ‘பிளாக்கிங்’ உடற்பயிற்சியின் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ‘பிளாக்கத்தான்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனர் கோ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குப்பைகளை சேகரித்து தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்த பின்னர், ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அதன் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்