டிரைவரை தாக்கியவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தில் கால் டாக்சி டிரைவர்கள் முற்றுகை

கால் டாக்சி டிரைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சக டிரைவர்கள் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.;

Update: 2020-02-02 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை துளசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 31). தனியார் கால் டாக்சி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு கிண்டியில் உள்ள ஓட்டலில் இருந்து 3 பேரை தனது காரில் கோவிலம்பாக்கத்துக்கு சவாரி ஏற்றிச்சென்றார். 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அவர்கள், காரில் ஏ.சி.யை போடும்படி கூறினர். அதற்கு டிரைவர் லோகநாதன், ஏ.சி. போட்டால் கார் முழுவதும் மதுபான நெடி வீசும். சவாரி வருபவர்கள், நான்தான் மது அருந்தி இருப்பதாக நினைப்பார்கள் என்றார். இதனால் லோகநாதனுக்கும், காரில் வந்த 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆலந்தூர் கோர்ட்டு அருகே வந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து டிரைவர் லோகநாதனை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் லோகநாதனின் தலையில் 12 தையல் போடப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கால் டாக்சி டிரைவர் லோகநாதனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சக கால்டாக்சி கார் டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பரங்கிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களுடன் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர், உதவி கமிஷனர் தேவராஜ், இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். “இது குறித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 3 பேரையும் கைது செய்வோம்” என்றனர்.

இதையடுத்து முற்றுகையை கைவிட்டு கார் டிரைவர்கள் கலைந்து சென்றனர். அப்போது கார் டிரைவர் லோகநாதன், திடீரென போலீஸ் நிலையம் முன் மயங்கி விழுந்தார். உடனே அவரை அம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரங்கிமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்