ஆழ்வார்திருநகரி அருகே பரிதாபம், தந்தை இறந்த துக்கத்தில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

ஆழ்வார்திருநகரி அருகே தந்தை இறந்த துக்கத்தில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-01 22:15 GMT
தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி குயில் நீண்டார் தெருவைச் சேர்ந்தவர் கோதண்ட பாண்டியன். இவருடைய மகன் பிலிப் ராஜா (வயது 38). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பொற்செல்வி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோதண்ட பாண்டியன் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து பிலிப் ராஜா தன்னுடைய மனைவி, குழந்தையுடன் வந்தார். பின்னர் அவர் சென்னைக்கு செல்லவில்லை. தந்தை இறந்த துக்கத்தில் பிலிப் ராஜா மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பிலிப் ராஜா திடீரென்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் கண்விழித்த பொற்செல்வி தன்னுடைய கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த பிலிப் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிலிப் ராஜாவின் சொந்த ஊர், ஆழ்வார்திருநகரி அருகே திருக்கோளூர் சொக்கனூர் ஆகும். தந்தை இறந்த துக்கத்தில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்