பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போக்சோ சட்டத்தில் காதலன் கைது

பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக போக்சோ சட்டத்தில் காதலனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-02-01 22:45 GMT
இடிகரை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் சாம்ராஜ் நகரை சேர்ந்த மகே‌‌ஷ் என்பவரின் மகன் தயாநிதிக்கும் (19) பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து தயாநிதி ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பம் ஆகியதாக தெரிகிறது.

இதையடுத்து பள்ளி மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தயாநிதியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முடியாது என்று கூறி மாணவியிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து மாணவி கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பள்ளி மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் அவர், காதலன் தயாநிதியிடம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து மைசூரில் இருந்த தயாநிதியை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார், தயாநிதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்